காளான் வளர்ப்பில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் பெண் : விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி!!

603

விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்ணொருவர், காளான் வளர்ப்பு தொழில் மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டி பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எரமல்லூரைச் சேர்ந்தவர் ஷிஜே வர்கீஸ். கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போதிலிருந்து லாபகரமான பண்ணையாக வளர்த்து வருகிறார்.

மலையாளத்தில் ‘கூன்’ என்று அழைக்கப்படும் காளான், கேரளாவில் அதிகமான அளவில் சாகுபடி செய்யப்படாமல் இருந்தது. ஆனால், அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு காளான்கள் தானாகவே ஆங்காங்கே முளைத்திருந்தன. இதனை கவனித்த ஷிஜே வர்கீஸுக்கு, சிறு வயதிலிருந்தே காளான் வளர்ப்பு மீது ஆவல் ஏற்பட்டுள்ளது.

திருமணம் முடிந்து வீட்டில் குழந்தைகளை கவனித்து வந்த ஷிஜே, அவர்கள் பெரிதாக வளர்ந்த பின்னரே கிடைத்த ஓய்வு நேரத்தில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட இவர், பயிற்சியை முடித்த பின்னர் காளான் வளர்ப்பு தொழில் ஆரம்பிக்க முயன்றார்.

ஆனால், ஆரம்பத்தில் இந்த தொழிலில் அவருக்கு தயக்கம் இருந்த நிலையில், தனது கணவரின் நம்பிக்கையான பேச்சால் உடனடியாக காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் ரப்பர் மரங்களின் துகள்களை வைத்து அடுக்குகள் அமைத்து காளான்களை வளர்த்துள்ளார். அவற்றின் வளர்ச்சியும், கணவரின் ஊக்கமும் ஷிஜேவுக்கு பண்ணையை விரிவுபடுத்த தூண்டின.

அதன் பின்னர் 6 மாதங்களில் 300 அடுக்குகள் கொண்ட காளான் பண்ணையை அமைத்தார். ஆனால், அது துரதிர்ஷ்டவசமாக தோல்வியில் முடிந்தது. இதனால் மனமுடைந்த ஷிஜேவை அவரது கணவர் தேற்றினார். அதனைத் தொடர்ந்து எச்சரிக்கையுடன் காளான் வளர்ப்பில் ஈடுபட்ட அவர், கேரளாவில் உள்ள பல்வேறு பண்ணைகளை பார்வையிட்டு தொழிலை புரிந்துகொண்டார்.

அதன்படி தனது பண்ணையில் நவீன குளிர்பதன முறையில், வெப்பநிலையை வைத்து காளானை வளர்க்க ஆரம்பித்தார். அந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரது காளான் பண்ணை வளர்ச்சியடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக காளான் வளர்ப்பு கைகொடுத்ததால், தனது பண்ணையில் கிடைத்த காளான்களை ‘கூன் பிரெஷ்’ எனும் பெயரில் வீட்டு முன் கடை அமைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

தொடக்கத்தில் வருமானம் பெரிதளவில் இல்லையென்றாலும், போக போக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது ஒரு கிலோ காளானை ரூ.300க்கு கொடுக்கும் ஷிஜே, மாதம் சுமார் 1 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார். இவரது பண்ணையில் வளரும் காளான்கள் கேரளா முழுவதும் விற்பனை செய்யப்படும் நிலையில், காளான் வளர்ப்புக்காக பல விருதுகளை ஷிஜே பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஷிஜே வர்கிஸ் கூறுகையில், ‘குறைந்த பராமரிப்பு தேவைப்பட்டாலும், காளான்களைப் பயிரிடுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் பொறுமையாகவும், மன உறுதியுடனும் இருந்தால் காளான் வளர்ப்பும் நல்ல லாபம் தரும் விடயம் தான்’ என தெரிவித்துள்ளார். தற்போது இவரது பண்ணையில் பயிற்சி பெற வெளிநாடுகளில் இருந்தும் ஆட்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.