தென் சூடானில் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையை அடுத்து, தமது பிரஜைகளின் பாதுகாப்புக் கருதி விமானமொன்றை பிரித்தானியா அனுப்பியுள்ளது.
தென்சூடானில் அரசியல் நெருக்கடி நிலை உக்கிரமடைந்துவரும் நிலையில் அங்குள்ள பிரித்தானியப் பிரஜைகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நோக்கில் விமானமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 150 பிரித்தானியப் பிரஜைகள் தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தென் சூடானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் சில பணியாளர்களும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தென்சூடான் அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்களை அடுத்து நெருக்கடி நிலைமை வலுப்பெற்றுள்ளது.
தென்சூடானில் தொடரும் வன்முறைகளில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 20 ஆயிரம் பேர் அங்குள்ள ஐநா அலுவலகத்தில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர்.
தென்சூடான் ஜனாதிபதி சல்வா கிர்ருக்கும் பதவி விலக்கப்பட்ட பிரதி ஜனாதிபதிக்கும் இடையிலான அதிகாரப் போட்டியே அங்கு வன்முறைகளை தோற்றுவித்துள்ளது




