
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காதலியைப் படுகொலை செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்ப முயன்ற 20 வயது இந்திய மாணவர் ஜெர்மனி விமான நிலையத்தில் வைத்து சர்வதேசப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரிசோனா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த வருண் பட்சிகரி (20) என்பவருக்கும், அவரது காதலி ஜுலிசா ரூபி சலசீருக்கும் (19) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 6 அன்று ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஜுலிசாவை வருண் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையைச் செய்த பிறகு, டியூசன் விமான நிலையத்திலிருந்து உடனடியாக ஜெர்மனி நாட்டின் ஃபிராங்ஃபர்ட் நகருக்கு வருண் தப்பிச் சென்றுள்ளார்.
ஜுலிசாவின் உடலைக் கண்டெடுத்த அமெரிக்கப் போலீசார், வருண் தப்பிச் சென்றதை அறிந்து உடனடியாகப் பன்னாட்டுப் புலனாய்வு அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்குத் தப்ப முயன்றபோது ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் வைத்து ஜெர்மனி போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள வருணை அமெரிக்காவிற்கு நாடு கடத்தி கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரிசோனா மாநிலக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





