நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆசனத்தில் அமர்ந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கமைய குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு பிரத்தியேகமாக ஆசனம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமர்ந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்த நிலையில் சபைக்கு வந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் திடீரென அமர்ந்து கொண்டார். இதனால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பந்துல குணவர்தன அமைச்சரை அந்த ஆசனத்தில் இருந்து எழுந்து செல்லுமாறு கூறியதை அடுத்து நிலைமையை சுதாரித்துக் கொண்ட அமைச்சர் அந்த ஆசனத்திலிருந்து எழுந்து சென்றார்.
அதேபோல நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்திலும் இன்னுமொரு எம்.பி. அமர்ந்துகொள்ள முயற்சித்த சம்பவமொன்றும் நிகழ்ந்ததது. எனினும், இறுதி நேரத்தில் நிலைமையை சுதாரித்துக்கொண்டு பின்னர் வேறு ஒரு ஆசனத்தில் அவர் அமர்ந்துகொண்டார்.




