சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்து வந்த குடும்பம்… இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் பாராட்டு!!

302

இளைஞன் செய்த நெகிழ்ச்சி செயல்

தமிழகத்தில் கணவனை இழந்து வறுமையில் தவித்து வந்த பெண்ணிற்கு இளைஞர் ஒருவர் செய்துள்ள உதவி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர், தினேஷ் சரவணன் (30). சென்னையில், ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர், அப்துல் கலாம் மாணவர் முன்னேற்றச் சங்கத்தில் மாநிலச் செயலாளராக உள்ளார். இவர் அந்த அமைப்பின் மூலம் வேலூரைச் சேர்ந்த ஏழைகளுக்கு உதவிகளைச் செய்துவருகிறார்.

அரிசி, பருப்பு எனச் சில நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை நண்பர்களின் உதவியுடன் ஏழை குடும்பங்களுக்கு வாங்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில், வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில், வறுமையில் வாடும் சித்ரா (35) என்பவரின் குடும்பத்துக்கு இவர் இலவசமாகக் கழிவறை கட்டிக்கொடுத்திருக்கிறார்.

கணவரை இழந்து, மகள் மற்றும் மகனுடன் சிறிய வீட்டில் வசித்துவரும் சித்ரா, கழிவறை இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதை அறிந்த தினேஷ் சரவணன், இலவசமாக 37 ஆயிரம் மதிப்பில் கழிவறை கட்டிக்கொடுத்திருக்கிறார்.

இது குறித்து சித்ரா கூறுகையில், என் கணவர் இறந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. கணவர் இல்லாததால், நான் தான் வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து கொள்கிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள், பெண் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். பையன் ஆறாம் வகுப்பு படிக்கிறாள்.

நான் வீட்டு வேலைசெய்றேன். மாசம் ஆயிரம் ரூபாய்தான் வருமானம் கிடைக்குது. சாப்பாட்டுக்கே வழியில்ல. பாத்ரூம் இல்லாம பொண்ண வச்சிக்கிட்டு ரொம்பவும் கஷ்டப்பட்டேன். காலை விடிவதற்கு முன்னாடியும், இரவு நேரத்தில் மட்டுமே திறந்த வெளியில் சென்று கொண்டிருந்தோம்.

அரசாங்கத்திடம் கேட்ட போது, இலவச கழிவறை திட்டத்துல இப்ப கட்டமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் இப்போது அந்த தம்பி பெரிய கழிவறையா கட்டி கொடுத்திருக்கார், அவர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினேஷ் சரவணன் கூறுகையில், கழிவறை கட்டி தருவதற்கு நண்பர்கள் முடிந்தளவிற்கு உதவி செய்தார்கள். எஸ்ட்டிமேட் போட்டுத்தான் கழிவறை கட்டுற பணியைத் தொடங்கினோம்.
ஹாலோ பிளாக் கல்லை லோடுவண்டியில ஏத்தி இறக்க கூலி கேட்டதால், நாங்களே ஏத்தி, இறக்கினோம்.

மணலுக்கு தட்டுப்பாடு இருக்கிறதுனால, சத்துவாச்சாரி பொலிசாரிடம் உதவி கேட்டோம். பொலிசார் சேவை மனப்பான்மையோடு பறிமுதல்செய்து வெச்சிருந்த ஒரு யூனிட் மணலைக் கொடுத்து உதவி செய்தார்கள் என்று கூறி முடித்தார்.