நாட்டின் பல இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்!!

484

மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

நாட்டில் தென்மேற்கு பருவ பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றமையால் நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்கு பகுதியில்) தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும், மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக பி.ப. 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டு பகுதிகளிலும் தெற்கு கரையோர பகுதிகளிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டில் தென்மேற்கு பருவ பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாட்டின் தென்மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.