பிறந்த நாள் அன்று விபத்தில் சிக்கி பலியான இளைஞன்!!

604

பலியான இளைஞன்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்பு சந்தியில் நேற்று (06.06) மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் எ.அசோக்குமார் (வயது 25) என்ற இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

மன்னாரில் இருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞரும், பிரிதொரு நபரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீதியூடாக மன்னார் நோக்க பயணித்த பட்டா ரக வாகனத்துடன் புதுக்குடியிருப்பு பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

பட்டா ரக வாகனம் சரியான பாதையூடாக மன்னார் நோக்கி பயணித்த போது, பாதையூடாக நேர் எதிரே மோட்டார் சைக்கில் பயணித்த போது விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது-25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி விக்கி (வயது-32) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்த நபர் மன்னார் பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டா ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் மது போதையில் காணப்பட்டதாக தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.