
அவுஸ்திரேலியாவில், பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் என இலங்கை வைத்தியருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த வைத்தியர் செய்த குற்றத்திற்கான நீதிமன்ற தண்டனை எதிர்வரும் ஜூன் 21ம் திகதி அறிவிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“2017ம் ஆண்டு டிசெம்பரில், இலங்கையைச் சேர்ந்த 49 வயதான வைத்தியர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்மீது பாலியல் ரீதியான தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, குறிப்பிட்ட பெண் சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்று வாடகை வண்டி ஒன்றின் மூலம் வீட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டை வைத்தியர் முழுமையாக மறுத்திருந்தார். அத்துடன், பெண்ணின் மீது எந்த நிலையிலும் தான் தப்பாக நடந்துகொள்ளவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
அந்தப்பெண்ணின் மீது மையல் கொள்ளுமளவுக்கு அவரொன்றும் வசீகரமானவர் இல்லை என்றும் பொலிஸ் விசாரணையில் வைத்தியர் கூறியுள்ளார். அந்தப்பெண் குழப்பமான மனநிலைகொண்டவராக தனக்கு தென்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை கணவனால் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட இப்பெண் முதற்கட்ட விசாரணையின் போது தன்மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டவர் என வேறொரு மருத்துவரை அடையாளம் காட்டியிருந்தார்.
இந்த பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து, நேற்று பத்துமணி நேர ஜூரிகளின் கலந்தாலோசனையின் பின்னர் முடிவுக்கு வந்திருக்கிறது.
இதன்படி, வைத்தியர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட உடனேயே சிறைக்கு கொண்டுசெல்லப்படவிருந்த போதும் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், குறித்த வைத்தியரின் குற்றத்துக்கான நீதிமன்ற தண்டனை எதிர்வரும் ஜூன் 21ம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




