சுவிஸில் 130 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட துயரம் : எச்சரித்தும் தடுக்கத் தவறிய நிர்வாகம்!!

253

130 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட துயரம்

சுவிட்சர்லாந்தின் போண்டோ கிராமத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவானது அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏற்பட்டது என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்ப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த நிலச்சரிவில் சிக்கி ஜேர்மனி, ஆஸ்திரியா, சுவிஸ் நாட்டவர்கள் 8 பேர் கொல்லப்பட்டதுடன் ஏராளமான குடியிருப்புகள் இந்த பேரழிவில் சேதமடைந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த இந்த பேரழிவானது முன்னறிவிக்கப்படவில்லை எனவும், இதனால் மண்டல நிர்வாகத்தின் மெத்தனம் என எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது எனவும் Graubunden மண்டல நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வெள்ளியன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சார்பாக வழக்கறிஞர் ஒருவர், போண்டோ கிராமத்தில் ஏற்பட்ட பேரழிவானது முன்னெச்சரிக்கை விடுத்தும், மண்டல நிர்வாகத்தால் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என ஆதாரத்துடன் முறையிட்டுள்ளார்.

நிலச்சரிவு ஏற்படுவதற்கு 2 வாரங்கள் முன்னரே அதற்கான அறிகுறிகள் Piz Cengalo மலைப்பகுதியில் தென்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, ஒரு வாரத்தில் அல்லது 30 நாட்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளமையும் நிபுணர்களால் கணிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் மண்டல நிர்வாகம் அதை கருத்தில் கொள்ளவில்லை எனவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தவறியது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள போண்டோ கிராமத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் Piz Cengalo மலைப்பகுதியில் இருந்து சுமார் மூன்று மில்லியன் கன மீற்றர் அளவுக்கு பாறை கீழே விழுந்தது.

இது அப்பகுதியில் பெரும் நிலச்சரிவை ஏற்படுத்தியது. சுவிஸ் வரலாற்றில் கடந்த 130 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான நிலச்சரிவு இது எனவும் நிபுணர்களால் பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 500,000 கன மீற்றர் அளவுக்கு இடிபாடுகளும் மண்ணும் கீழே பாய்ந்தன.