அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பனிப்புயலின் தாக்கம் இன்னும் மக்களை சகஜ நிலைமைக்குத் திரும்ப விடவில்லை.
நியுயோர்க், வொஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களின் விமான நிலையங்களில் 7000க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட முடியாமல் காத்திருந்தன.
இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்லமுடியாமல் பயணிகள் தடுமாறினர்.
இந்தப் புயலின் தாக்கத்தில் அமெரிக்காவில் குறைந்தது 11 பேர் பலியாகியிருக்ககூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் மின்சாரமின்றி தவித்தனர். மிக்சிகன் நகரில் 2,50,000 பேர் மின்சார இணைப்பு சீரமைக்கப்படுவதற்காகக் காத்திருந்தனர்.
மைனே நகரில் 1,00,000 பேருக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீண்டும் சரி செய்யப்படாத சாலைகளும், நடைபாதைகளும் வழுக்ககூடிய அபாயம் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டின் டொராண்டோ நகரில் 1,15,000 வாடிக்கையாளர்கள் இன்னமும் மின்சாரத்திற்காகக் காத்திருப்பதாக நகர மேயர் ரோப் போர்ட் கூறினார். கிறிஸ்துமஸ் பிறகுதான் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கின்றனர்.




