வவுனியாவில் பிரதமரின் பாராட்டைப் பெற்ற வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்!!

313

ப.சத்தியலிங்கம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே இந்த பாராட்டை தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணத்திற்கான மூலோபாய சுகாதார அபிவிருத்தித் திட்டம் தயாரித்து அதனடிப்படையில் நெதர்லாந்து நாட்டின் நிதிஉதவி மற்றும் இலகுகடன் அடிப்படையில் பெறப்பட்ட €60 மில்லியன் ( 12,000 மில்லியன் இலங்கை ரூபா) நிதியில் வவுனியா வைத்தியசாலையில் இருதயநோய் சிகிச்சைப்பிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவு என்பனவும்,

பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் நவீன சத்திரசிகிச்சை மற்றும் கதிரியக்கப் பிரிவும், கிளிநொச்சியில் தாய்சேய் விசேட சிகிச்சை மத்திய நிலையமும், மாங்குளத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்களிற்கான சிகிச்சை பிரிவு மற்றும் உளநலப்பிரிவும் அமைக்க முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்நிதியை நெதர்லாந்து அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்கான முயற்சிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவிற்கான அடிக்கல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, நெதர்லாந்து நாட்டின் துணை வதிவிடப் பிரதிநிதி மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இந்நிலையில் இந்நிதியை பெற்று மேற்படி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உதவியமைக்காக பிரதமர் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.