வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத பொலிஸார்!!

340

பொலிஸார்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை 15 நாட்கள் கடந்தும் பொலிஸார் நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீ விரவாத தா க்குதலையடுத்து நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. இதன்போது பேரூந்து நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிஸார் சோதனைச் சாவடி அமைத்து பேரூந்து நிலையத்திற்குள் வந்து செல்வோரின் பயணப் பொதிகளை சோதனை செய்து வருகின்றனர்.

இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் காணப்படும் பேரூந்து நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் மட்டுமே சோதனைகள் தொடர்கின்றது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறித்த பொலிஸ் சோதனையை நீக்குமாறு மக்கள் பிரதிகள், மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடமும் தெரிவித்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து கடந்த முதலாம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக

அமைச்சர் றிசாட் பதியுதீன், குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவமோகன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் சோதனை சாவடியை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்த போதும் கூட்டம் முடிந்தும் 15 நாட்கள் கடந்தும் சோதனை கெடுபிடிகள் தொடர்கின்றது.

இதனால் மக்கள் பலரும் பேரூந்து நிலையத்திற்குள் செல்லாது வீதியில் நின்று பேரூந்துகளில் ஏறுகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட கூடிய நிலை உருவாக்கியுள்ளது. எனவே பொலிஸார் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.