டெல்லியில் வரலாறு காணாத அளவில் கடுங்குளிர்!!

455

Delhiடெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு கடுங்குளிர் நிலவுகிறது.

அத்துடன் குளிர் காற்றும் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் நேற்று காலையில் 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது. இது கடந்த 10 ஆண்டுகளில், டிசம்பர் மாதத்தில் நிலவிய மிக குறைந்த அளவு வெப்ப நிலையாகும்.

அங்கு அதிகபட்சமாக 19.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. இதுவும் வழக்கமான அளவை விட 1 டிகிரி குறைவாகும்.

இதே நிலையே இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் டெல்லி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து கடுங்குளிரும், மூடுபனியும் நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமால் தவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே டெல்லியில் காலை நேரத்தில் கடும் மூடுபனி நிலவுவதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல்வேறு ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்றுள்ளதால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் பனிக்கட்டிகளாக உறைந்து காணப்படுகின்றன. புகழ்பெற்ற தால் ஏரி, பெரும்பாலான இடங்களில் உறைந்து பனிக்கட்டியாக காட்சியளிக்கிறது. இது கடைசியாக1986ம் ஆண்டில் முற்றிலும் உறைந்தது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் மைனஸ் 10.2 டிகிரியும், லே பகுதியில் மைனஸ்17.7 டிகிரியும் வெப்பநிலை காணப்பட்டது. மேலும் அங்கு கடுமையான பனிப்பொழிவும் காணப்படுவதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.