வவுனியா – பாலி ஆற்றின் காணியை சுவீகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா!!

546


காணியை சுவீகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்



வவுனியா – பாலி ஆற்றின் ஒருபகுதி காணியை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா சுவீகரித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் றூ.கேதீஸ்வரனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.



காடழித்தல் மற்றும் பாலி ஆற்றின் ஒரு பகுதியில் காணி சுவீகரிக்கப்பட்டமை தொடர்பில் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரவில் காடழித்து விவசாயம் செய்யப்பட்டு வருவதுடன் பாலி ஆற்றின் ஒரு பகுதியில் அடாத்தாக காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.




இவ்வாறு தங்களது 28.06.2019 திகதி முறைப்பாட்டு கடிதத்தின்படி குறிப்பிடப்பட்ட காணியானது, தாங்கள் குறிப்பிட்டது போல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவினால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தி சுவீகரிக்கப்படவில்லை என்பது அறிக்கைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது என்பதை தயவுடன் அறியத் தருகின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் அவர் எவ்வாறு காணியை சுவீகரித்தார்? என்பதற்கு அப்பால், சுவீகரிக்கப்பட்ட காணியை அரசு மீள பெற்றுக்கொள்ள எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது? என்பது தொடர்பில் அப்பகுதிமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சாந்தி சிறிஸ்கந்தராசா பதவியில் இருந்த காலத்தில் சுவீகரித்த காணியை, 18 வயதான அவரின் மகனின் பெயரில் பதிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அது தடுக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்களில் தெளிவுபடுத்தியிருந்தார்.


நாடாளுமன்ற உறுப்பினரால் சுவீகரிக்கப்பட்ட காணியை அரசு மீள பெற வேண்டும் எனவும், அல்லது காணி அற்ற ஏழை குடும்பங்களிற்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும், வன அழிப்பில் அழிவுக்குள்ளான பெறுமதி மிக்க தாவரங்களிற்கான நட்ட ஈட்டினை பெற்று தர வேண்டும் எனவும் கோருகின்றனர்.

-தமிழ்வின்-