
சட்டதிட்டங்களுக்கு அமையவே எம்மால் முதியோரை இல்லத்தில் இணைக்க முடியும் என வவுனியா, கூமாங்குளம் சாயி முதியோர் இல்லம் தெரிவித்துள்ளது.
கடந்த 14.09.2019 அன்று இரவு அடைக்கலம் கோரிச் சென்ற முதியவர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுக்காது திருப்பி அனுப்பியமை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாயி இல்ல நிர்வாகம் இவ்வாறு தெரிவித்தது. அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
சட்டதிட்டங்களுக்கு அமையவே நாம் முதியவரை எமது இல்லத்தில் இணைக்க முடியும். மனிதாபிமானம் வேறு. சட்டம் வேறு. இங்கு வேலை செய்பவர்களில் பலர் அரசாங்க உத்தியோகத்தர்களாகவும், அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்களாகவும் இருப்பதால் சட்டத்திற்கு அமையவே செயற்பட முடியும்.
குறித்த தினத்தில் முதியவரை எமது இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அங்கு நின்ற எமது இல்லத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் ஏதாவது தவறாக இருந்திருக்கலாம். ஆனால் இணைக்காமல் விட்டது சரியானதே.
நாம் ஏற்கனவே சிறுவர் இல்லம் நடாத்திய போது பல பிரச்சனைகளை எதிர்கொண்டோம். முதியோர் இல்லத்திலும் அவ்வாறான பிரச்சனைகள் ஏற்படக் கூடாது என்ற அடிப்படையிலேயே செயற்படுகின்றோம்.
நாம் தற்போது தான் முதியோர் இல்லமாக மாற்றியிருக்கின்றோம். 5 முதியவர்கள் தான் இருக்கிறார்கள். 50 பேர் வரை இணைக்கவுள்ளோம். ஆனால் எம்மிடம் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி அதன்படி முதியவரை அழைத்து வந்தால் அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் மற்றும் வவுனியா மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.கெனடி, பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.




