வவுனியாவில் இராணுவத்தினர் திடீர் சோதனை நடவடிக்கை : மக்கள் மத்தியில் பதற்றம்!!

367

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (19.09) காலை தொடக்கம் இராணுவத்தினர் கடும் சேதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் சிருடையிலும், சிவில் உடையிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

மெனிக்பாம் சிவானந்தா வீதியை மறித்து வீதித்தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினர் அவ்வீதியால் செல்லும் வாகனங்கள், பொதுமக்களை துருவித் துருவி விசாரணை செய்து வருவதுடன் பொது மக்களின் பொருட்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

செட்டிக்குளம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் கிராமத்தை அண்டிய காட்டுபகுதியில் சிவில் உடையிலும், இராணுவ சீருடையிலும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் கடுமையான பாதுகாப்பு பணியில் இடுபட்டுள்ளனர்.

குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் பொது மக்களை பல மணிநேரம் வீதியில் தடுத்து வைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்களின் பொதிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.

செட்டிக்குளத்தில் அமைந்துள்ள கஜசிங்கபுர இராணுவ முகாம் படைப்பிரிவின், மெனிக்பாம் இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற இராணுவத்தினரே இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த மெனிக்பாம் கிராமத்து மக்கள்,

வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்கள் அன்றாட பாவனைக்கு உட்படுத்தும் கைபேசி உட்பட தலைக்கவசம் வரையில் பொருட்களை சோதனையிடுவதுடன் பல மணிநேரமாக தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்டுவரும் இராணுவத்தினரின் நடவடிக்கை காரணமாக பெண்கள் குழந்தைகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

அத்துடன் செட்டிக்குளம் பிரதேசத்தில் மூவின மக்களும் வாழ்ந்து வரும் நிலையில் தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் கிராமம் மாத்திரமே சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கிராமத்தில் வீடுகளிலிருந்து மக்கள் வெளியில் வர அஞ்சுவதாக கிரம வாசிகள் தெரிவித்தனர்.