வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை : நகரில் 5 டெங்கு நோயாளர்கள் : 103 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயநிலை!!

821

வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை

வவுனியா நகரப்பகுதியில் 5 உள்ளூர் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 103 இடங்களில் நுளம்பு பெருக்கக் கூடிய இடங்களாக இணங்காணப்பட்டு அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் தொற்று குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள மில் வீதியில் இருந்து டெங்கு நோய் தொற்று ஆரம்பித்துள்ளது. இந்த உள்ளூர் தொற்று காரணமாக வவுனியாவில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

அதற்காக பொது சுகாதார பரிசோதகர்களும், மலேரியா தடை இயக்கமும் இணைந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்துள்ளனர். சென்ற 19 ஆம் திகதியில் இருந்து இந்த நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை 260 இடங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதில் 103 இடங்களில் நுளம்பு பெருக்கக்கூடிய நிலை காணப்பட்டதுடன், உடனடியாக அவை அழிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான தொற்று ஏற்படக் கூடிய வகையில் இடங்களை வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

38 இடங்களில் நுளம்பு குடம்பிகள் இனங்காணப்பட்டு மலேரியா தடைப் பகுதி பூச்சியியளாளரினால் ஆய்வு செய்யப்பட்டு 21 நுளம்பு மாதிரிகள் ஏஜிஎசிரைட் நுளம்பு வகை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட இடங்களுக்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளயப்படவுள்ளது. இந்த நோய் பரம்பலைக் கட்டுப்படுத்த பொது மக்களினுடைய ஒத்துழைப்பு அவசியமானது.

பொது மக்களினுடைய அக்கறையின்மை தான் இந்த நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. பல தடவை அறிவுறுத்தல் வழங்கியிருந்தும் அவர்களது கவலையீனம் இந்த நுளம்பு உற்பத்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நோயாளர்கள் உருவாகியுள்ளார்கள். எனவே தினமும் ஒவ்வொரு குடும்பமும் தமது வீடு, கடை என்பவற்றை சுத்தம் செய்து டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இது ஒரு சமூக செயற்பாடாக கருதி செயற்பட வேண்டும். இந்த தொற்று மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

அதேபோல், பாடசாலைகளும் நுளம்பு அற்ற செயற்திட்டம் நாடாளாவிய ரீதியில் செயற்படுத்தப்படுகிறது. அதனை சகல பாடசாலைகளும் ஒரு சமூக தொண்டாக கருதி செயற்பட வேண்டும்.

இந்த வகையில் வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் பாடசாலை வடமாகாணத்திற்கே முன்னுதாரணமாக அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். இதேபோல் ஏனைய பாடசாலைகளும் செயற்பட வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நுளம்பு அற்ற சூழலை உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, டெங்கு நோய் பரவும் வகையில் காணப்படும் இடங்கள் சோதனை செய்யப்படுவதுடன் அவற்றை அழிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.