இந்தியாவில் முதன்முறையாக ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் : கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!!

250

ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண்

பார்வையற்ற நிலையிலும் ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற பெண்ணொருவர், திருவனந்தபுரம் துணை மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றார். மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில்(31). இவர் 6 வயதில் தனது கண்பார்வையை இழந்தார்.

எனினும் தன்னம்பிக்கையை இழக்காத பிரஞ்சால், பள்ளி கல்வியை வெற்றிகரமாக முடித்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். பின்னர் சர்வதேச உறவுகள் தொடர்பான தனிப்பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய ஆட்சி பணி தொடர்பான பட்டம்பெற விரும்பி, அதற்குரிய பாடங்களை வாசித்து காட்டும் மென்பொருளின் உதவியுடன் கற்றறிந்தார். அடுத்த ஆண்டே ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதிய பிரஞ்சால், தேசிய அளவிலான தரப்பட்டியலில் 124வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.ஏ.எஸ் பெண் அதிகாரி என்ற சிறப்பை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் உள்ள எர்னாகுளத்தில் உதவி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். இதற்காக அவர் தேசிய நிர்வாக இயல் கழகத்தில் பயிற்சி பெற்றிருந்தார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் துணை மாவட்ட ஆட்சியராக பிரஞ்சால் பட்டில் நேற்று பதவி ஏற்றார். ஏற்கனவே எர்னாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றியதன் அனுபவத்தின் அடிப்படையில், பிரஞ்சாலுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.