வவுனியாவில் வழிபாட்டின் போது ஆலயம் ஒன்றின் கூரை வீழ்ந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில்!!

575

வவுனியாவில் வழிபாட்டின் போது..

வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்தின் கூரைப் பகுதி விழுந்தமையால் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சாஸ்திரிகூழங்குளம் பகுதியில் உள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதப் பூஜை மதியம் இடம்பெற்றது. குறித்த ஆலயத்தின் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது வசந்த மண்டபத்தின் முன் கூரைப்பகுதி முறிந்து விழுந்தது.

இதனால் குறித்த ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் காயமடைந்திருந்தனர். காயமடைந்த நால்வரும் நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆலயத்தின் கூரைப்பகுதி கடந்த 15 வருடங்களாக எந்தவித திருத்தப்பணிகளும் இடம்பெறாமல் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.