ரெலோவின் ஆதரவு எனக்கே : செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என்கிறார் சிவாஜிலிங்கம்!!

322


ரெலோவின் பலர் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்ட குழு தமிழ் ஈழ வி டுதலை இயக்கத்தின் (ரெலோ) இன்று ஒர் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன் போது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்கள்.



ரெலோவினுடைய தலைமைக் குழு கடந்த 6 ஆம் திகதி வவுனியாவில் ஒன்று கூடி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது தொடர்பில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.



இதன் போது 15 உறுப்பினர்களில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட 11 உறுப்பினர்கள் சஜீத் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.


செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா உட்பட நான்கு உறுப்பினர்கள் சஜீத் பிரேமதாசவையும் எந்தவொரு சிங்கள வேட்பாளரையும் ஆதரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

ரெலோவின் யாழ் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (9.11) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


அதில் 21 உறுப்பினர்கள் தலமைக்குழுவின் முடிவினை தாம் நிராகரிப்பதாக தெரிவித்ததுடன், சிவாஜிலிங்கத்தினை ஆதரிப்பதாக தீர்மானத்தினை எடுத்துள்ளனர்.

இதற்கு நான்கு நபர்கள் மாத்திரம் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இந்த மாற்றம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரமல்ல பல மாவட்டத்திலிலுள்ள ரெலோ உறுப்பினர்கள், முன்னனி தலைவர்கள் எனக்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவருக்கு முன்னிலையிலேயே எங்களுடைய வாக்குகள் சிவாஜிலிங்கத்திற்கு தான் என பலர் கூறியிருகின்றனர்.

அதே போல தமிழ் தேசிய கூட்டமைப்பில் ரெலோ அல்லாத கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட எனக்கு ஆதரவு என தெரிவித்துள்ளனர். அவர்களின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை.


ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ளாமை அவர் தடுமாறிக் கொண்டிருக்கின்றார் என்பது தெரிகின்றது என தெரிவித்துள்ளார்.