வவுனியாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மோ சடிகள் : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

423


தொடர்ச்சியாக..



வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரி) அலுவலகத்திற்குட்பட்ட மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மாவட்ட விலை நிர்ணய குழுவின் விலை மற்றும் கடந்த கால கொள்விலைகள் ஆகியவற்றிலும் பல மடங்கு அதிகரித்த கொள்விலையில் விவசாய உள்ளீட்டு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் மேற்கொண்ட கணக்காய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது.



2015, 2016, 2017, 2018 ஆகிய காலப்பகுதிகளில் ஒரு கியூப் மாட்டெருவானது ரூபா 2500 தொடக்கம் 5333 ரூபாவிற்கு உட்பட செலவில் கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவின் காலப்பகுதியில் (27.06.2019) திகதியில் ஒரு கியூப் மாட்டெருவானது 10,200 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.




அத்துடன் 2016 ,2017, 2018 ஆகிய காலப்பகுதிகளில் ஒரு கியூப் மேல்மண் ரூபா 2333 தொடக்கம் 2666 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவின் காலப்பகுதியில் (17.07.2019) திகதியில் ஒரு கியூப் மேல்மண் ரூபா 11,200 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


ஒரு கியூப் மாட்டெரு ரூபா 5333.30 சந்தை விலை காணப்பட்ட போதிலும் ஒரு கியூப் 10,200 ரூபா வீதம் 12கியூப் மாட்டெரு (கொள்வனவு பெறுமதி – ரூபா 122400) கொள்வனவு செய்துள்ளமையினால் அரசாங்கத்திற்கு 58,400 ரூபா மேலதிக செலவீனம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கியூப் மேல்மண் ரூபா 2666.60 சந்தை விலை காணப்பட்ட போதிலும் ஒரு கியூப் 11,200 ரூபா வீதம் 15 கியூப் மேல்மண் (கொள்வனவு பெறுமதி – ரூபா 168,400) கொள்வனவு செய்துள்ளமையினால் அரசாங்கத்திற்கு 1,28,400.00 ரூபா மேலதிக செலவீனம் ஏற்பட்டுள்ளது.


வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவின் காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட மாட்டெரு மற்றும் மேல்மண் ஆகியவற்றின் சந்தைப்பெறுமதி 104,000.00 ஆக காணப்பட்ட போதிலும் மாட்டெரு , மேல்மண் ஆகியவற்றினை 2,90,800.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு 1,86,800 ரூபா மேலதிக செலவீனம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மாட்டெரு மற்றும் மேல்மண் ஆகியவற்றுக்கு எதுவிதமான தட்டுப்பாடுகள் இல்லாததுடன் கடந்தகால விலைகளில் வழங்குவதற்கு வழங்குநர்கள் தயாராக உள்ள நிலையிலும் கடந்தகால விலைகளைக்காட்டிலும் மாட்டெருவின் விலை 91வீதத்தினாலும் மேல்மண்ணின் விலை 330வீதத்தினாலும் அதிகரித்த விலையில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் மேற்கொண்ட கணக்காய்வின் போது மேலும் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி மாட்டெரு, மேல்மண் கொள்வனவின் போது சந்தை விலைகளை விட மேலதிகமாக ரூபா 1,86,800 ரூபா கொடுப்பனவு செய்யப்பட்டமை ஒர் சிக்கனமற்ற செலவினமேயாகும் எனவும் கொள்வனவில் முறையற்ற பெறுகை நடைமுறையினை பின்பற்றியதன் விளைவான அரசாங்கத்திற்கு 1,86,800 ரூபா மேலதிக செலவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப உத்தியோகத்தருடன் இணைந்து கடந்த 2019.07.31ம் திகதி வவுனியா பிரதி விவசாயப்பணிப்பாளர் (விரி) அலுவலகத்திற்குட்பட்ட மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் மேற்கொண்ட கணக்காய்வின் போது 105,696 ரூபா பெறுமதியான மாட்டெரு , மேல் மண் அங்கு பற்றாக்குறையாக காணப்பட்டதாக கணக்காய்வில் தெரியவந்துள்ளது.

நாற்றுமேடை , பொதியிடல் நோக்கத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட மேல்மண்ணின் தரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் மண்ணின் மாதிரியினை பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டு பெறப்பட்ட ஆய்வு அறிக்கையில் பிரகாரம் 80 வீதம் பொருத்தமற்றதாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரி) அலுவலகம் தொடர்ச்சியாக அரசாங்க பணத்தினை மேலதிக செலவினை ஏற்படுத்தி வருவதுடன் முறையான பெறுகை நடைமுறையினை பின்பற்றாமல் செயற்படுவதாக வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது போன்று வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரி) அலுவலகத்தால் பல்வேறு மோ சடிகள் இடம்பெற்றுள்ளதுடன் அரச நிதி வீ ண்விரயோகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் ஆதாரங்களுடன் வெளியானபோதும் இதுவரை தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.