வவுனியாவில் 191 டெங்கு நோயாளிகள் : அதிகரிக்கும் டெங்கு : ஒரு பாடசாலை மூடப்பட்டது!!

418


டெங்கு நோயாளிகள்



வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் 140 ஆக அதிகரித்துள்ளதுடன் பாடசாலை ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.



டெங்கு நோயின் தாக்கம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.




இந்த 3 மாத காலப்பகுதியில் 140 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர். பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


வவுனியாவின் பிரபல பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 6 மாணவிகளும், ஒரு ஆசிரியரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து எமது பூச்சியல் ஆய்வாளர்கள் அந்த பாடசாலையைச் சென்று பார்வையிட்ட போது அங்கு டெங்குக்குரிய நுளம்பும், அதற்குரிய குடம்பியும் இனங்காணப்பட்டுள்ளது.

இதனால் இது தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளரால் கடிதம் மூலம் பாடசாலைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் (13.11) மட்டும் 18 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கெடுத்துள்ளதை மேலும் உணர்த்தியுள்ளது.


வவுனியா நகரம், இறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம், ராணி மில் வீதி, வைரவபுளியங்குளம், கற்குழி, தேக்கவத்தை போன்ற பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் டெங்கு நுளம்பு பெரும் இடங்கள் அவதானிக்கப்பட்டு அதற்கு எதிரான நடவடிக்கைகள் பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் களப்பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்போது டெங்கு பெரும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.