வவுனியாவில் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள 1000 அரச ஊழியர்களை காப்பாற்றிய மூன்று உத்தியோகத்தர்கள்!!

394


வவுனியாவில்..



ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றையதினம் இடம்பெற்று வாக்கு எண்ணும் பணிகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16.11.2019) மாலை 5.30 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.



தேர்தல் கடமையில் 1000 க்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




இந்நிலையில் கடமையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இரவு வழங்கப்பட்ட உணவு (கிழங்கு ரொட்டி) பழுதடைந்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள நகரசபை பொது சுகாதார பரிசோதகர்களிடம் தெரிவிக்கப்பட்டது.


அதனையடுத்து ஊழியர்களுக்கு உணவிணை வழங்கும் வவுனியா பிரதேச செயலக சிற்றுண்டிச்சாலை மற்றும் வவுனியா மாவட்ட செயலக சிற்றுண்டிச்சாலை என்பவற்றினை நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்குட்படுத்தினார்கள்.

குறித்த இரு சிற்றுண்டிச்சாலைகளினதும் உணவு தயாரிக்கும் இடம் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் உணவுகளின் தரம் பரிசோதிக்கப்பட்டது.


வவுனியா மாவட்ட செயலக சிற்றுண்டிச்சாலையின் உணவுகள் தரமான நிலையில் காணப்பட்டதுடன் உணவு தயாரிக்கும் இடமும் சுகாதாரமான முறையில் காணப்பட்டது.

அதன் பின்னர் வவுனியா பிரதேச செயலக சிற்றுண்டிச்சாலையினை சோதனைக்குட்படுத்திய சமயத்தில் சுகாதார சீர்கேடான முறையில் காணப்பட்டதுடன் கிழங்கு ரொட்டிக்கு வைக்கப்படும் கறியும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.

அதனையடுத்து குறித்த சிற்றுண்டிச்சாலையில் காணப்பட்ட கறி அனைத்தும் நகரசபை பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைக்கிணங்க குப்பையில் கொட்டப்பட்டது.

வவுனியா பிரதேச செயலக சிற்றுண்டிச்சாலையில் இன்றிரவு 841 கிழங்கு ரொட்டிகள் தயாரிக்கப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த சிற்றுண்டிச்சாலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.