மன்னார் பிரதான வீதி

வவுனியா மன்னார் பிரதான வீதி விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து வீதியின் நடுவே வாழை மரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மன்னார் முதன்மை வீதி, நெளுக்குளம் ஊடாக வீரபுரம் செல்லும் வீதி, பூவரசங்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வீதி, குழுமாட்டுச் சந்தியூடாகச் சுந்தரபுரம் செல்லும் வீதி, பிரமனாலங்குளம் பெரிய தம்பனை வீதி, கோவில்குளம் ஊடாக சிதம்பரபுரம் செல்லும் வீதி,

ஓமந்தை சேமமடு வீதி, சாந்தசோலை – பூந்தோட்டம் பிரதான வீதி உள்ளிட்ட மக்கள் பாவனை அதிகமுள்ள வீதிகள் அடங்கலாக வவுனியா மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் பயன்படுத்துகின்ற வீதிகள் அனைத்தும் போக்குவரத்துக்கு ஒவ்வாத வீதிகளாகவே காணப்படுகின்றன.

வடக்கின் மிக முக்கிய போக்குவரத்து மையமான வவுனியாவின் வீதிகள் சீரழிந்து உள்ளமை வவுனியா மக்களுக்கு மட்டுமன்றி வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாகத் தினமும் மன்னார் நகரத்தில் இருந்தும் மன்னார் மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களில் இருந்தும் வவுனியாவுக்குப் பயணம் செய்யும் ஆயிரக் கணக்கானவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

போ ர்க் காலங்களை விட தற்போது தான் வீதிகளின் நிலை கேவலமாக உள்ளன. அதே நேரத்தில் கண்துடைப்பிற்காக குழிகளை அடைக்கும் பணிகளே வருடாவருடம் இடம் பெறுகின்ற போதும் குழிகளும் முழுமையாக அடைக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் பிரமணாலங்குளம் பகுதியில் வவுனியா மன்னார் பிரதான வீதியில் வீதியின் நடுவே மன்னார் வீதி விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது என்ற வாசகத்தினை தாளில் எழுதி அதனை வாழை மரத்தில் கட்டி வாழை மரத்தினை வீதியில் நடுவே காணப்பட்ட குழியினுள் நாட்டப்பட்டுள்ளது.

10வருடங்களுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்படும் வவுனியா – மன்னார் பிரதான வீதி எப்போது செப்பனிடப்படும்?




