வவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : கட்டுப்படுத்த களமிறங்கிய இலங்கையின் உருள் பந்து வீரர்கள்!!

564


வவுனியாவில் தீவிரமடையும் டெங்கு



வவுனியாவில் டெங்கின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை உருள் பந்து வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.



இலங்கை உருள் பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் சுகாதார திணைக்களத்தின் அணுசரணையுடன் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று உருள் பந்து வீரர்களால் முன்னெடுக்கப்பட்டது.




வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பமான உருள் பந்து வீரர்களின் ஊர்வலத்தை பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.


மாவட்ட செயலகத்தில் இருந்து சென்ற ஊர்வலமானது மன்னார் வீதியூடாக குருமன்காட்டு சந்தியை அடைந்து, அங்கிருந்து வைரவபுளியங்குளம் ஊடாக வவுனியா நகரம் தொடர்ந்து பசார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, கண்டி வீதி எனச் சென்று வாடி வீடு முன்பாக முடிவடைந்தது.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் போது டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், பொது மக்களுக்கான அறிவித்தலும் வழங்கப்பட்டது.


இதில் சுகாதார திணைக்களத்தினர், உருள் பந்து வீரர்கள், பொலிசார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.