வவுனியாவில் மழை காரணமாக 400 குடும்பங்களைச் சேர்ந்த 1308 பேர் பாதிப்பு : 105 வீடுகளும் பகுதியளவு சேதம்!!

583

வவுனியாவில்..

வவுனியாவில் மழை காரணமாக 400 குடும்பங்களைச் சேர்ந்த 1308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை, வெடிவைத்தகல், ஊஞ்சல்கட்டி, புளியங்குளம் தெற்கு, நெடுங்கேணி தெற்கு, மாமடு, அனந்தர் புளியங்குளம், கற்குளம், நைனாமடு, புளியங்குளம் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய 242 குடும்பங்களைச் சேர்ந்த 721 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 17 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளது.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரதேச செயலக பிரிவின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் 156 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேர் பாதிப்படைந்ததுள்ளதுடன், 86 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளது.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் மருதமடுவ பகுதியில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிப்படைந்துள்ளதுடன், இரு வீடும் சேதமடைந்துள்ளது. இதன்படி வவுனியா மாவட்டத்தில் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1308 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 105 வீடுகள் பகுதியளவு பாதிப்படைந்துள்ளன.

மேலும் ஒரு நலன்புரி நிலையத்தில் இருந்து மக்கள் மீள தமது இடங்களுக்கு திரும்பியுள்ள நிலையில் வவுனியா வடக்கில் மருதோடை, இராமனூர், புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 3 நலன்புரி நிலையமும், செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயத்தில் ஒரு நலன்புரி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றது.

இன்று (08.12) பகல் மழை பெய்யாமையால் தாழ் நிலப்பகுதிகளின் வெள்ள நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.