தாக்குதல் நடத்தினால் பதிலடி : ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை!!

622

Jappanசர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள சீனக் கப்பல்கள் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கிடைக்கும் என சீனா எச்சரித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுவா சுன்யிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்..

எங்கள் பகுதிகளின் இறையாண்மையை பாதுகாப்பதில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை ஜப்பான் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த விவகாரத்தில் ஜப்பான் எங்களை சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஜப்பான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தாது வளமும், எண்ணெய் வளமும் மிக்கதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிகள் 2012ம் ஆண்டு வரை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. இந்நிலையில், அப் பகுதிகள் தங்களது எல்லைக்குட்பட்டவை என சீனா அறிவித்தது.

சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய அப்பகுதிகளை இணைத்து தனது வான் பாதுகாப்பு மண்டலமாக சீனா அறிவித்ததால், ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

அதனையடுத்து தற்காப்புக்காக மட்டும் படைகள் என்ற கொள்கையைக் கைவிட்டு, தாக்கும் திறனை அதிகரிக்கும் வகையில் படைகளை நவீனப்படுத்தப் போவதாக ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே தெரிவித்தார்.

மேலும் இரண்டாம் உலகப்போரில், ஜப்பானின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை நினைவுபடுத்தும் யாசுகுன் போர் நினைவகத்துக்குச் சென்றும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந் நடவடிக்கைகளைக் கண்டித்த சீனா, தனது போர்க்கப்பல்களை சர்ச்சைக்குரிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியது.

அது குறித்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஓனோடெரா தெரிவிக்கையில் எங்கள் கடல் பகுதியில் சீனா மீண்டும் மீண்டும் அத்துமீறுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஹுவா சுன்யிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.