பேச்சுவார்த்தை இல்லையேல் போர் : பாகிஸ்தான் எச்சரிக்கை!!

580

Pakistanஅரசின் பேச்சுவார்த்தை முயற்சிக்கு தலிபான் தீவிரவாதிகள் உடன்பட மறுத்தால் போரை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் செüத்ரி நிஸார் அலி கான் திங்கள்கிழமை கூறியதாவது:

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அரசின் முக்கிய செயல்திட்டமாக உள்ளது. அதன்படி, அந்தத் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது. ஆனால் இதற்கு உடன்படாவிட்டால் அவர்கள் போரை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

எங்களுடைய நோக்கம் பாகிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே. குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் அமைதி சூழ்நிலை உருவாக வேண்டும். அவர்கள் தங்களின் உரிமைகளை பெறுவதற்காக தேவையற்ற கடும் போரை சந்தித்துள்ளனர்.

அந்த மக்களை ரத்தம் சிந்துவதில் இருந்தும், துப்பாக்கிக்கு பலியாவதிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
அந்நிய சக்திகளின் சுய நோக்கத்திற்காக இந்தப் பிராந்திய மக்கள் முடிவில்லாத போரில் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பல்வேறு தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அவர்கள் பயங்கரவாத செயல்களில் இருந்து வெளியே வருவர் என்று நம்புகிறோம் என்று செத்ரி நிஸார் அலி தெரிவித்தார்.