வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக போ ராட்டம் மேற்கொண்டவர் மீது தாக்குதல்!!

481

வவுனியாவில்..

வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் வவுனியா மாவட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிற்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையால் ஒன்று வவுனியாவில் நாளை இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் அவருக்கு எதிரான வசனம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்தனர்.

இந்நிலையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தல் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் நின்றிருந்த சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சூசைபிள்ளையார் குளம் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற ஈழமக்கள் ஜனநாய கட்சியினர், அவரை சூசைப்பிள்ளையாகுளம் பகுதியில் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.