வவுனியாவில் மூடப்படும் நிலையில் இருந்த பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!!வவுனியா, வெளிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை குறைவாக காணப்பட்டிருந்த நிலையில் மூடப்படும் தறுவாயில் இருந்துள்ளது.

இப் பாடசாலைக்கு கடந்த ஆறு மாதங்களாக அதிபர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.இந்நிலையில் இவ்வருடம் முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய பாஸ்கரமூர்த்தி நேசராஜா வடமாகாண கல்வி திணைக்களத்தால் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு குறித்த பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இம்மாதம் 2ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.


க.பொ.த.சாதாரண தரம் வரை உள்ள குறித்த பாடசாலையில் கடந்த வருடம் 35 மாணவர்கள் மாத்திரமே கல்விகற்று வந்திருந்த நிலையில், புதிய அதிபர் நியமிக்கப்பட்டதோடு இவ்வருடம் 15 மாணவர்கள் புதிதாக இணைந்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிய பாடசாலைகளை நாடாமல் வெளிக்குளம் பாடசாலையில் தமது பிள்ளைகளை இணைத்துக்கொள்ளுமாறு பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கேட்டு நிற்கின்றனர்.