கொரோனா வைரஸ் தாக்கம் : தாமரை கோபுரத்தை திறப்பதில் கால தாமதம்!!

318

தாமரை கோபுரம்

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம், பொது மக்களுக்காக திறந்து வைப்பது மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட பெரும்பாலான சீன ஊழியர்கள் சீன புத்தாண்டுக்காக சீனா திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் திட்ட இயக்குநர் சாந்தா குணானந்தா இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், புத்தாண்டுக்காக சீனாவுக்கு சென்ற பெரும்பாலான சீன ஊழியர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்னும் இலங்கைக்கு திரும்பவில்லை என்று கூறினார்.

இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பொது மக்களுக்காக திறப்பதில் மேலும் தாமதமாகியுள்ளது என்றார். திட்டம் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால், கடந்த ஆண்டு செம்டம்பர் 16ம் திகதி இந்த கோபுரம் திறக்கப்பட்டது.

எதிர்வரும் மார்ச் முதல் பொது நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக தாமரை கோபுரம் அரசிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.