வீட்டை விட்டு ஓடிய பெண் 30 வருடங்களின் பின் பணக்காரியாக திரும்பினார்!!

542

Lady17 வயதில் வீட்டைவிட்டு ஓடி, பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மனம் தளராது போராடி வாழ்வில் வெற்றி பெற்று மீண்டும் அவரது தாயகத்திற்கு திரும்பியுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த மார்வாரி இனப் பெண்ணான சண்டா சாவேரி புவல்காவின் 17 ஆவது வயதில் அவளுடைய பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

படித்து சுயமாகத் தொழில் செய்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் இருந்த சண்டாவிற்கு இந்த ஏற்பாடு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால் தனக்கு உதவுவதாகக் கூறிய அமெரிக்கத் தம்பதியர் ஒருவருடன் அவர் தனது வீட்டைவிட்டு கிளம்பி அமெரிக்கா சென்றுவிட்டார்.

இது நடந்தது 1984 ஆம் ஆண்டு ஆகும். முப்பது வருடங்களுக்கு முன்னால் சாதிக்கவேண்டும் என்ற கனவோடு தனியாக கிளம்பிய இந்தப் பெண் இப்போது ஒரு இலட்சாதிபதி தொழில் முனைவோராக கொல்கத்தா வந்துள்ளார்.

இந்தியாவிலும் தனது உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்துவதற்கான முயற்சியில் அவர் தற்போது இறங்கியுள்ளார். அந்த தன்னம்பிக்கைப் பெண் கூறிய தகவல்கள் பின்வருமாறு..

அமெரிக்கா சென்று ஒரு மாதம் வரை தன்னை அழைத்துச்சென்ற தம்பதியருடன் ஒரே அறையில் தங்கியிருந்த சண்டா அங்கிருந்த நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் பணியை ஏற்றுக் கொண்டார். படுக்கைப் புண்களுடன் சிரமப்பட்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளும்போதுதான் இதற்கு மாற்றாக ஏதேனும் மருந்து கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.

அதன்பின்னர் லாஸ்ஏஞ்சல்ஸ் சென்று கால்டெக் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிப்பின் ஒரு பிரிவில் அவர் சேர்ந்தார். தனது கனவை நெருங்குவதாக அவர் உணர்ந்த சமயத்தில்தான் சண்டா இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

மனம் தளராமல் நோயுடன் போராடி மீண்டுவந்த சண்டா நோயினால் சோகையாக வெளுத்திருந்த தனது தோலில் மீண்டும் மெருகேறுவதற்காக உருவாக்கிய ஒரு கிரீம் அவருக்கு பழைய வசீகரத்தைக் கொடுத்ததுடன் அவரது தொழிலுக்கான வழியையும் காட்டியது.

பட்டப்படிப்பை முடித்த பின்னர் அழகு சாதனப் பொருட்கள் முதலீட்டாளர்கள் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோது அவரது தொழிலைத் தொடங்குவதற்கான முதலீடு உதவி அவருக்குக் கிடைத்தது.

அதன் மூலம் அவர் தயாரித்த நீரிழிவு நோயாளிகளின் காயங்களை ஆற்றும் மருத்துவ கிரீம்களும், தோலின் பளபளப்பிற்கு உதவும் கிரீம்களும் மற்றும் முகத்திற்கு பொலிவைத் தரக்கூடிய கிரீம்களும் பிரபலமாகத் தொடங்கின.

இவற்றினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது அவரது தொழில்வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. கொல்கத்தாவிலிருந்து சென்ற நான்கு வருடங்களில் மீண்டும் தனது குடும்பத்தினருடன் சண்டா தொடர்பை புதுப்பித்துக் கொண்டார்.

இப்போது கொல்கத்தா வந்துள்ள அவர் தனது விற்பனைப் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்த வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தங்கள் இனப் பெண்கள் தற்போது மேற்படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் வளர்ச்சியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக அவர் கூறினார்.

தன்னுடைய விற்பனைத் தொழிலிலும் பெண்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர் தங்களுடைய கனவுகள் நிறைவேற கடுமையான உழைப்பும், முயற்சியும் தேவை என்பதைக் குறிப்பிட்டார்.