பொலிஸ் நிலையத்திற்குள்ளும் கொரோனா வைரஸ் : சுய தனிமைப்படுத்தலில் பொலிஸார்!!

707

புத்தளம், முந்தல் பொலிஸார் மற்றும் அங்கு சேவை செய்யும் அதிகாரிகளை சுய தனிமைப்படுத்த பொது சுகாதார பரிசோதகர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

திடீர் விபத்து காரணமாக கைது செய்யப்பட்டு முந்தல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி மதுரங்குளி பிரதேசத்தில் வான் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று மோதுண்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் இத்தாலியில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் நாட்டிற்கு வந்தவர் எனவும் அவர் தலவில தேவாலயம் வரை பயணித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பின்னர் சந்தேக நபர் புத்தளம் பதில் நீதவானிடம் ஆஜர்படுத்திய போது இந்த மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் இருந்து வெளியேறிய சந்தேக நபருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நடந்த சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய சந்தேக நபரை கைது செய்த முந்தல் பொலிஸார், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து அதிகாரிகளை சுயதனிமைப்படுத்துவதற்கு நேற்று மாலை நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.