காணி மாநாட்டில் பங்கேற்க ததேகூ குழு லண்டன் விஜயம்!!

487

TNAபிரித்தானிய தமிழ் அவையின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று லண்டன் சென்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன் மற்றும் பா.அரியனேத்திரன் ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர்.

கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இந்த மாநாட்டிற்கு செல்லவுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் விசா அனுமதி கிடைக்கவில்லை. பெரும்பாலும் இன்னும் ஓரிரு தினங்களில் அவர்களும் லண்டன் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட கிழக்கு மாகாணத்தில் யுத்ததின் பின் ஏற்பட்டிருக்கும் காணி அபகரிப்புக்கள், சுவீகரிப்பு உள்ளிட்ட ஏனைய காணிசார் பிரச்சினைகள் சம்மந்தமாக சர்வதேச சமூகத்திற்கு ஜெனிவா மாநாட்டை முன்னிட்டு விளக்கும் முகமாக காணி மாநாடொன்றை பிரித்தானிய தமிழ் அவை ஏற்பாடு செய்துள்ளது.

இரு தினங்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி தொடக்கம் 28 ம் திகதி வரை ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாடு ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை மையப்படுத்தி பிரித்தானிய தமிழ் அவை காணி ஆய்வு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.