“ஒற்றுமையை வளர்ப்போம் உலகை வெல்லும் தேசமாய்” சுதந்திர தின தொனிப்பொருள்!!

372

SLஇலங்கையின் சுதந்திர தினம் இம்முறை “ஒற்றுமையை வளர்ப்போம் உலகை வெல்லும் தேசமாய்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் என அரச நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின ஏற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாக தேசிய சுதந்திர தின விழா நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருவதாகவும் இம்முறை கேகாலையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் திருகோணமலையில் சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெற்ற வேளை சுமார் 25,000 பேர் கலந்து கொண்டதாக தெரிவித்த அமைச்சர் இம்முறை அதைவிட அதிகமானவர்கள் கலந்து கொள்வர் எனவும் கூறினார்.

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன் தேசிய கீதத்தின் பெருமை, மதிப்பு குறித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர தினத்தன்று கேகாலை மாவட்டத்தில் உள்ள ஐந்து மதஸ்தலங்களில் வழிபாடுகள் இடம்பெறும் எனவும் விசேட பிரமுகர்கள் 3000 பேர் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வர் எனவும் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

கேகாலையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் 1400 தரைப்படையினர், 250 வான் படையினர், 250 கடற்படையினர், 250 பொலிஸார், 250 சிவில் படையினர், 768 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளதோடு 16 கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை சுதந்திர தினத்தன்று கொழும்பில் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் கலந்து கொள்வர் என அவர் தெரிவித்தார்.