
திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் ஐந்தாம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி சிறுவனொருவர் இரு கால்களும் உடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில் அவரது மாமியாரின் வீட்டுக்கு சக நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த வேளை மற்றுமொரு நண்பர் மோட்டார் சைக்கிளில் வருகைதந்து விளையாட்டாக குறுக்கே மோட்டார் சைக்கிளை போட்டமையினாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்விபத்தில் திருகோணமலை ஐந்தாம் கட்டை, கெமுனு புற பகுதியைச் சேர்ந்த லால் அசின்த (15 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லையெனவும், ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சுற்றி திரிந்தவர் எனவும் தெரியவருகின்றது.
இவ்விபத்து தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





