இலங்கை வீரர்கள் பயிற்சி பெறும் குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரி முற்றுகை..!

439

இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரியை வரும் ஜூன் 25ஆம் திகதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது.

கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்திய அரசு துச்சமாகக் கருதுகிறது. தமிழர்களின் தன்மானத்தை வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறது. தமிழக அரசும், தமிழ் நாட்டில் மான உணர்வுள்ள அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் மத்திய அரசின் இந்தத் துரோகச் செயலுக்குப் பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்ததையும் காங்கிரஸ் அரசு பொருட்படுத்தவே இல்லை.

கடந்த மே 27-ஆம் திகதியில் இருந்து சிங்கள இராணுவத்தின் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகியோர் பயிற்சியைத் தொடருவது மட்டுமல்ல; அக்கொடியோருக்கு நீலகிரி மாவட்டத்தில் இன்பச் சுற்றுலாவையும் நடத்தி இருக்கிறது.

ஒரு பக்கத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை நாளும் தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர்கிறது. நாதியற்றுப் போய்விடவில்லை தமிழ் இனம்; மானமும் வீரமும் அழிந்து விடவில்லை என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டியது நமது தலையாயக் கடமையாகும்.

எனவே, 25-ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு குன்னூர் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியை முற்றுகையிடுவோம். மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுப்போம்.

எங்கள் தொப்புள்கொடி உறவுகளை, தமிழ்க்குலச் சொந்தங்களைக் கொன்று குவித்த இரத்தம் தோய்ந்த கரங்களோடு உலவுகிற சிங்களக் கொடியோருக்கு எங்கள் மண்ணிலேயே பயிற்சியா? இந்திய அரசே! அக்கொடியோரை உடனே வெளியேற்று! எனும் கோரிக்கையை முன்வைத்து முற்றுகைப்போர் நடத்துவோம். நானும் உங்களோடு பங்கேற்கிறேன். இந்திய அரசுக்கு பாடம் புகட்ட, தமிழகத்தை ஆயத்தப்படுத்த இந்த அறப்போர் களத்தில் அணிதிரள்வோம் வாரீர்”.

இவ்வாறு வைகோவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.