இலங்கையில் இந்தியா கட்டிவரும் 50 ஆயிரம் வீடுகள் குறித்து இன்று நடந்த உயர் மட்டக் கூட்டத்தின் முடிவில் பேசிய இந்தியத் துணைத் தூதர் எஸ்.மகாலிங்கம் இந்த திட்டத்தின் பயனாளிகள் பொறுமை காக்க வேண்டும் என்று கூறினார்.
போருக்குப் பிறகான இலங்கையில், இந்திய உதவியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களை, குறிப்பாக வடக்கில் நடைமுறைப்படுத்தப்படும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டப் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை, இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறையின் விசேட செயலர் சுஜாதா மேத்தா, இந்திய வெளியுறவுத்துறையின் மேலதிக செயலரும், நிதித்துறை ஆலோசகருமாகிய வினய்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இலங்கையின் வடபகுதியில் இரண்டு தினங்கள் பார்வையிட்டதன் பின்னர், வெள்ளியன்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்திய வீட்டுத் திட்டத்தைச் செயற்படுத்துகின்ற நிறைவேற்று நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடனான இந்தச் சந்திப்பில் அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், தடைகள் என்ன என்பது குறித்தெல்லாம் விரிவாக பேசப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்தார்.
இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதில் வவுனியா மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் குறைபாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டிருப்பதாகவும் மகாலிங்கம் கூறினார்.