காலி மாவட்டத்தில் 30 பேர் மரணம் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

406

காலி மாவட்டத்தில்..

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் காலி மாவட்டத்தில் மட்டும் 30 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி பொலிஸாரின் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களிற்குள் இந்த மரணங்கள் பதிவாகியிருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இதுபோன்று இரண்டு மரணங்களே பதிவாகியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும், ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியதன் காரணமாக முறையான மருந்துகள் கிடைக்கும் வைத்தியசாலைகளின் இலவச மருத்துவ சேவைகளுக்காக செல்ல முடியாத நோயாளர்களே இவ்வாறு மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணித்தவர்களில் நீரிழிவுநோய், புற்றுநோய், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் ஆகிய பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தவர்களே திடீர் மரணத்தைத் தழுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் காலி, கராபிட்டி மற்றும் மஹா மோதர, கூட்டுறவு, தெற்கு மருத்துவமனைகள் மற்றும் ஏராளமான தனியார் மருத்துவ மையங்கள் உட்பட பல அரச வைத்தியசாலைகள் இருக்கின்றன.

எனினும், காலி பொலிஸ் நிலையத்தில் அதிகமான திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், இலங்கையின் பிற பொலிஸ் பகுதிகளில் இதுபோன்ற மரணங்கள் ஏற்படாமல் தடுக்க அரசு அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காலி பொலிஸ் தலைமையக ஆய்வாளர் கபிலா ஜயம்பதி டி சில்வாவிடம் விசாரித்தபோது, ​​ காலிபொலிஸ் பிரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும், அதற்கான காரணத்தை கூற முடியாது என கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-