தாய்லாந்தில் நீச்சல் வீரர்கள் இருவர் உலகிலேயே மிக ஆழத்தில் திருமணம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
ஜப்பானைச் சேர்ந்த ஹிரோயுகி யோஷிதாவும், அமெரிக்காவைச் சேர்ந்த சாண்ட்ரா ஸ்மித்தும் தாய்லாந்தில் நீச்சல் பயிற்சியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
காதலர்களான இவர்கள் தங்களது ஆழமான காதலை வெளிப்படுத்தும் வகையில் கடலுக்கடியில் சுமார் 130 மீற்றர் ஆழத்திலுள்ள குகை ஒன்றில் வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுடன் பணியாற்றும் சக பயிற்சியாளர்களில் ஒருவர் திருமணம் செய்து வைக்கும் மத குருவாகவும், 2 பேர் மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை தோழர்களாகவும் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
அனைவரும் பிராண வாயுக் கருவிகளைப் பொருத்தியிருந்தாலும், திருமணம் முடிந்ததும் மரபுப்படி ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்வதற்காக மணமக்கள் அந்தக் கருவிகளை கழற்றி எறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்தத் திருமணம், உலகிலேயே மிக ஆழமான இடத்தில் நடைபெற்ற திருமணம் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.




