வவுனியாவில் தொடரும் நெற்காணிகள் மீட்பு நடவடிக்கை : அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்!!

1158

நெற்காணிகள் மீட்பு நடவடிக்கை..

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் நெற்காணியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வாகனம் திருத்தும் நிலையத்தினை அகற்றுமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் அவர்களினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தின் எழுத்திலான அனுமதியின்றி நெற்காணி பதிவேட்டுல் பதியப்பட்டுள்ள நெற்காணியில் கட்டுமானத்தினை நிர்மாணிப்பது 2011ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்ட 2000ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 32ம் பிரிவின் உப பிரிவு (1) இன் பிரகாரம் குற்றச் செயலாகும்.

இதன் பிரகாரம் பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வாகனம் திருத்தும் நிலையத்தினை எதிர்வரும் 20.06.2020ம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த திகதியினுள் இவ் வாகனம் திருத்தும் நிலையத்தினை அகற்றாவிடின் நீதிமன்றத்தின் உத்தரவுடன் அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் பிறப்பித்துள்ள உத்தரவு அறிவுறுத்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.