வவுனியாவில் ஏற்றுமதியை மையமாக கொண்டு மஞ்சள் செய்கை : விவசாய திணைக்களம் நடவடிக்கை!!

581

Manjalவட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் முதன் முறையாக மஞ்சள் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் ஆலோசனை வழிகாட்டலில் மஞ்சள் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஊடு பயிராகவும் தனி நிலச்செய்கையாகவும் மஞ்சள் செய்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.

9 தொடக்கம் 12 மாத பயிர்ச்செய்கையான மஞ்சல் செய்கை குறைந்த பராமரிப்பு செலவுகளுடன் அதிகளவான வருமானத்தை ஈட்டுவதற்கு ஏற்ற பயிர்ச்செய்கை என விவசாயிகள் புலகாங்கிதமடைகின்றனர்.

மலையகத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்துமே வட மாகாணத்திற்கு மஞ்சல் கொள்வனவு செய்யப்படுகின்ற போதிலும் தற்போது வவுனியா மாவட்டத்தில் செய்கை பண்ணப்படுவதால் குறைந்த விலையில் நுகர்வோர் மஞ்சலை பெற வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மஞ்சல் செய்கை அறுவடையின் பின்னர் சந்தைப்படுத்தலில் தாம் பிரச்சனையை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம் என மஞ்சள் செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் தம்மிடம் விவசாய திணைக்களம் கொள்வனவு செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றனர்.

இதேவேளை வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அ.சகிலாபாணுவிடம் தெரிவித்தபோது..

மஞ்சள் செய்கை விவசாய திணைக்களத்தினால் முதன் முறையாக வவுனியா மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ் அறிமுக திட்டத்திற்கான முழு நிதியினையும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை எமக்கு வழங்கியுள்ளது.

ஏற்றுமதி வாய்ப்பை மையமாக கொண்டு நாம் வவுனியா மாவட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். இத் திட்டத்தில் விவசாயிகள் மிகுந்த ஆர்வமாக உள்ளதால் எமது திட்டத்திற்கு உட்பட்ட பயனாளிகள் மட்டுமல்லாது பல விவசாயிகள் தற்போது இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் எமது திட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளிடம் தற்போது மஞ்சளை கொள்வனவு செய்தவற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் வவுனியா மாவட்டத்தில் இத் திட்டத்தை மேலும் விஸ்தாக்க முடியும் என தெரிவித்தார்.