வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளரின் பெயரில் பொலிசாருக்கு கடிதம்!!

990


தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளரின் பெயரில்..



தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஒருவரின் பெயரில் பொலிசாருக்கு எதிராக போடப்பட்ட மொட்டை கடிதம் குறித்து செட்டிகுளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் எஸ்.தவபாலன் பெயரில் புளியங்குளம் பொலிசாருக்கு எதிராக செட்டிகுளத்தில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.




குறித்த கடிதம் தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தால் புளியங்குளம் பொலிசார் ஊடாக அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது.


குறித்த அழைப்பாணை தொடர்பில் இன்று (05.07) புளியங்குளம் பொலிசாரிடம் சென்று குறித்த வேட்பாளர் கேட்டபோது வவுனியா போலீசிற்கு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிசிற்கு சென்ற வேட்பாளரை வவுனியா, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு பொலிசார் அனுப்பியுள்ளனர்.


அங்கு சென்ற பின் செட்டிகுளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு செல்லுமாறு வேட்பாளரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற வேட்பாளரிடம் அவரது பெயரில் வந்த கடிதம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக வாக்கு மூலம் பெற்ற பொலிசார் குறித்த கடிதத்திற்கும் வேட்பாளருக்கும் சம்மதம் இல்லை என தெரிவித்ததையடுத்து, அவரை விடுவித்துள்ளதுடன், குறித்த கடிதம் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.