கரீபியன் பிறீமியர் லீக்: ஜமேகாவுக்கு விளையாடுகிறார் முத்தையா முரளிதரன்

438

கரீபியன் தீவுகளில் இடம்பெறவுள்ள கரீபியன் பிறீமியர் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் இலங்கையின் முத்தையா முரளிதரன் – ஜமைக்கா அணி சார்பாகப் பங்குபற்றவுள்ளார். அவ்வணிக்கான நட்சத்திர வெளிநாட்டு வீரராக முத்தையா முரளிதரன் செயற்படவுள்ளார்.

கரீபியர் பிறீமியர் லீக் தொடரின் 6 அணிகளுக்குமான நட்சத்திர வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக முத்தையா முரளிதரன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவ்வீரர்களின் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், 6 வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்த அடம் கில்கிறிஸ்ற் உபாதை காரணமாகப் பங்குபற்ற முடியாது போயுள்ளதால், அவருக்குப் பதிலாக சொய்ப் மலிக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி அன்ரிகுவா அணியின் உள்ளூர் வீரராக மார்லன் சாமுவேல்ஸூம், வெளிநாட்டு வீரராக றிக்கி பொன்டிங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வணியின் பயிற்றுவிப்பாளராக விவியன் றிச்சர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பார்படோஸ் அணியின் உள்ளூர் வீரராக கெரான் பொலார்ட்டும், வெளிநாட்டு வீரராக சொய்ப் மலிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பயிற்றுவிப்பாளராக டெஸ்மொன்ட் ஹெய்ன்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கயானா அணியின் உள்ளூர் வீரராக சுனில் நரைனும், வெளிநாட்டு வீரராக மொஹமட் ஹபீஸூம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பயிற்றுவிப்பாளராக றொஜர் ஹார்ப்பர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜமைக்கா அணியின் உள்ளூர் வீரராக கிறிஸ் கெயிலும், வெளிநாட்டு வீரராக முத்தையா முரளிதரனும், பயிற்றுவிப்பாளராக போல் நிக்ஸனும் நியமிக்கப்படுள்ளனர்.

சென் லூசியாவின் உள்ளூர் வீரராக டெரன் சமியும், வெளிநாட்டு வீரராக ஹேர்ச்சில் கிப்ஸூம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பயிற்றுவிப்பாளரான அன்டி றொபேர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்ரினிடாட் அன்ட் ரொபாக்கோவின் உள்ளூர் வீரராக டுவைன் பிராவோவும், வெளிநாட்டு வீரராக றொஸ் டெய்லரும், பயிற்றுவிப்பாளராக கோர்டன் கிறீனிஜ் உம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தொடர் இன்னும் இரண்டு மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.