பாடசாலை மாணவர்களுக்காக கல்வியமைச்சு அறிமுகப்படுத்தும் புதிய நடைமுறை!!

566

புதிய நடைமுறை..

அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை காலத்திற்கான மாணவர் அடையாள இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போது பாடசாலைகளில் கல்வி பயிலும் 43 லட்சம் மாணவ, மாணவிகளில் 39 லட்சம் பேரின் தகவல்கள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 லட்சம் மாணவர்களின் தகவல்களை துரிதமாக கணனிமயப்படுத்திய பின்னர், இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கல்வியமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு அடையாள இலக்கம் வழங்கப்பட்ட பின்னர், மாணவர்கள், அந்த இலக்கத்தை 5 ஆம் ஆண்டு புலம்பரிசில் பரீட்சை, சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைகள், விளையாட்டு உட்பட ஏனைய திறமைசார் போட்டிகளுக்கு பயன்படுத்த முடியும்.

தற்போதுள்ள மாணவ, மாணவிகளுக்கு அடையாள இலக்கங்கள் வழங்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அடையாள இலக்கங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.