காதலர் தினம் தேவைதானா?

505

Kaathalar thinam

கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரங்களில் கலந்துவிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படும் விதங்கள் குறைந்து வருகிற நிலையில் நம் கலாசாரத்துக்கு ஒவ்வாத காதலர் தின விழா கொண்டாட்டங்கள் ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்து வருகின்றன.

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்ட நம் நிலப்பரப்பில் காதல் என்பது இலைமறை காயாகத்தான் பயன்படுத்தப்பட்டது. வீரம், விவேகம், அறிவு, அன்பு, பாசம், இன்பம், துன்பம் ஆகியன கலந்த கலவையாகத்தான் தமிழர்களின் வாழ்க்கைத்தரம் அமைந்துள்ளதே தவிர, இன்றைய இளைஞர்களைப் போல் காதல் ஒன்றுதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்று நமது முன்னோர்கள் கருதவில்லை.

அனுபவத்தின் வாயிலாகத்தான் தங்களின் காதலை நம் முன்னோர்கள் வளர்த்தார்களே தவிர, தற்போதைய காதலர்களைப் போல பார்க், பீச், ஹோட்டல், திரை அரங்குகள் போன்றவற்றில் தங்களின் காதலை வளர்க்கவில்லை. இக் காதலர் தினம் அதோடு நிற்காமல் ஆபாச உடையணிந்து பொது இடங்களில் ஆடிப்பாடித் திரிந்துகொண்டு வெட்கம் என்ற ஒன்றை மறந்துவிட்டு முத்தமிட்டு கொண்டாடுகின்றனர்.

இதனால் காதலிப்பவர்களுக்கும் அக் காதலை எதிர்ப்பவர்களுக்கும் காதலர் தினத்தன்று வன்முறையும் கலவரமும் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட காதலர்களின் பெற்றோர்கள் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தங்கள் குழந்தைகளுக்காக காவல்நிலையங்களில் கையொப்பம் இடும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

காதலர் தின கொண்டாட்டங்களை ஆதரிப்பவர்களும் காதலர்களும் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான், “நீங்களெல்லாம் காதலிக்கவில்லையா? உங்களின் காதல் ஆசை நிறைவேறாத காரணத்தால்தான் எங்களின் காதலைத் தடுக்க முயற்சி செய்கிறீர்கள்” என்பதாகும். இன்றைய இளைஞர், யுவதிகள் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய பெற்றோகளின் பெரும்பாலானோர் நேற்றைய காதலர்களே என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை.

ஆனால் காதலர் தினத்தன்று கும்மாளம் போடும் இன்றைய காதலர்கள் நாளைய பெற்றோர்கள் என்பதை மனதில் நிலைநிறுத்த வேண்டும். ஆகவே, காதலர் தினம் தேவையா? தேவையற்றதா? என்று பட்டிமன்றம் நடத்த வேண்டிய அவசியமில்லை. அயல்நாட்டு கலாசாரத்தை அடிபிறழாமல் அப்படியே பின்பற்றத் துடிக்கும் நம் நாட்டு இளைஞர்கள் காதல் என்ற வலையில் கன்னியர்களைச் சிக்க வைக்க அவர்களுக்குத் தகுந்தவாறு வேடமிட்டு நடித்து அதில் வெற்றியும் காண்கின்றனர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்களான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களே.

காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்து கொண்ட பெரும்பாலான காதலர்கள் இப்போது தங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்துக்காக விண்ணப்பம் செய்கின்றனர் என்பது நடைமுறை உண்மை.

20 ஆண்டுகளுக்கு முன் தங்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனோ அல்லது எதிர்ப்புடனோ காதல் திருமணம் செய்துகொண்ட இன்றைய காதலர்களின் பெற்றோர், காதலர் தின கொண்டாட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்களா அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பார்களா என்று கணக்கெடுப்பு மூலம் ஆய்வு செய்தால், பெரும்பாலான பெற்றோர்கள் காதலர் தின கொண்டாட்டத்துக்கும், காதல் திருமணத்துக்கும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

நம் இளைஞர்களும் இளம்பெண்களும் காதலர்தினத்தைக் கொண்டாடாமல் இருப்பதும் அதற்காக ஆடம்பர வீண் செலவுகள் செய்யாமல் இருப்பதுமே, அவர்கள் தங்களின் உண்மையான காதலுக்கும் செய்யும் மிகப் பெரிய புண்ணியமாக இருக்கும்.
தற்கால காதல் அழகு, கவர்ச்சி, ஏழை, பணக்காரன், பதவி, பணம் ஆகிய அளவீடுகளை வைத்துத்தான் நிர்ணயம் செய்யப்படுகிறதே தவிர, சங்ககால காதலைப் போல மனதால் ஒன்றுபட்டு வாழ்க்கையில் இணையும் காதல் தற்கால காதல் அல்ல என்பதை உணர வேண்டும்.