புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான 8 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!

399

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு எட்டு பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களுமே இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு மக்களின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தில் இருந்து மட்டும் மூன்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட பவித்ரா வன்னியராச்சி, முதிதா சொய்சா, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரலே ஆகியோரே இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ரஜிகா விக்ரமசிங்க சப்பரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே மற்றும் கோகிலா குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீதா குமாரசிங்க காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட ரோஹினி காவிரத்னேவும் நாடளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும், அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேசிய பட்டியல்கள் வழியாக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களைப் பொறுத்து நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் இலங்கை வரலாற்றில் இதுவரையில் 6.5% ஐ தாண்டவில்லை.

2015-2020 நாடாளுமன்றத்தின் போது, ​​பெண் பிரதிநிதித்துவம் 5.3% ஆக இருந்தது, 225 உறுப்பினர்களில் 12 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.