மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்..

பொதுத் தேர்தல் இடம்பெற்ற வாரத்தினுள் நான்கு நாட்கள் (ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதி) இலங்கையில் அனைத்து அரச , தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் இன்றையதினம் (10.08.2020) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

200 மாணவர்களுக்குக் குறைவாகக் கொண்ட பாடசாலைகளின் நடவடிக்கைகள் வழமை போன்று ஐந்து நாட்களும் நடைபெறும். 200 மாணவர்களுக்கு கூடுதலாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும்.தரம் ஐந்து மாணவர்கள் ஐந்து தினங்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

தரம் ஒன்று முதல் தரம் நான்கு வரையான மாணவர்கள் வாரத்தில் சில நாட்கள் மாத்திரம் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும். திங்கட்கிழமை தரம் ஒன்று மாணவர்களும், செவ்வாய்க்கிழமை தரம் இரண்டு மாணவர்களும், புதன்கிழமை தரம் மூன்று மாணவர்களும் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும்.

தரம் நான்கு மாணவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும். இதேவேளை, தரம் ஆறு மாணவர்கள் திங்கட்கிழமையும், தரம் ஏழு மாணவர்கள் செவ்வாய்க்கிழமையும்,

தரம் எட்டு மாணவர்கள் புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தரம் ஒன்பது மாணவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும்.

தரம் பத்து முதல் தரம் 13 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியும். ஒரு மீற்றர் இடைவெளியைப் பேண முடியுமாயின் சகல மாணவர்களும் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்குச் செல்லலாம் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






