வவுனியாவில் ஆவா குழு, டில்லு குழு பாணியில் அதிகரிக்கும் கோஸ்டி மோதல்கள்!!

632

Gangவவுனியாவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக கோஸ்டி மோதல்கள் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக வைரவபுளியங்குளம், பண்டாரிகுளம், தோணிக்கல், தேக்கவத்தை, குட்செட் வீதி, உக்குளாங்குளம் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் கோஸ்டி மோதல்களில் ஈடுபட்டுவருவதுடன் சிலர் காயமடைந்து வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அண்மையில் வைரவபுளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்கு தனது மகளை ஏற்றச் சென்ற பெற்றார் ஒருவரையும் இளைஞர் குழுவொன்று தாக்கியதுடன் வாடி வீட்டு உரிமையாளரான மா.கதிர்காமராசா மீதும் கத்தியால் வெட்டி இளைஞர் குழுவொன்று காயப்படுத்தியிருந்தது.

குறிப்பாக தனியார் கல்வி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மாலை வேளையில் கூடும் இக் குழுக்கள் கல்வி கற்க வரும் மாணவிகளுக்கு பல்வேறு வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை வவுனியா பிரபல ஆண்கள் பாடசாலையில் கற்கும் சில மாணவாகள் வெளி நபர்களின் தொடர்புகளை பயன்படுத்தி தமக்கு எதிரான மாணவர்களை தாக்குவதாகவும் அண்மையில் பாடசாலை வளாகத்திறகுள் வெளியார்கள் சென்று மாணவர்களை தாக்கிய சம்பவம் இடம்பெற்றதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

வவுனியாவில் அதிகரித்துள்ள இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவதில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தும் சமூக ஆர்வலர்கள் பொலிஸாரின் அசண்டையீனமே இளைஞர் குழுக்கள் வீதியில் நிற்பதற்கும் கோஸ்டி மோதலில் ஈடுபடவும் காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலை தோன்றுமாயின் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆவா குழு, டில்லுக் குழு போன்று வவுனியாவிலும் உருவாகி விடும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.