இந்த நிலைமைக்கு நானும் பொறுப்பு : சந்திரிகா கவலை!!

309

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமைக்கு தானும் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து வருத்தப்படுகிறேன். சில நேரங்களில், இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு என்ன நேர்ந்தது என்பதற்கும் நானும் பொறுப்பு என்று நினைக்கிறேன்.

அது நான் செய்த காரணத்தினால் அல்ல, நான் செய்யாத காரணத்தினால் தான் அவ்வாறு எண்ணத் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நான் ஒன்பது ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடவில்லை. அரசியலுக்கு மீள வரக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தேன்.

எனினும், மறைந்த மாதுலுவே சோபித தேரர் உள்ளிட்ட பல மக்கள் மற்றும் குழுக்களால் கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர் 2015 இல் தான் மீண்டும் அரசியலுக்கு திரும்பியிருந்தேன்.

அந்த நேரத்தில் நாட்டையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அழிப்பதை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நினைத்திருந்தேன்.

தவறு செய்ததற்காக வெளியேற்றப்பட்டவர்களால் நான் ஐக்கிய தேசிய கட்சிக்கு சென்றதற்காக விமர்சிக்கப்பட்டேன். நான் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தேன் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனினும், 2015 ஆம் ஆண்டில், நாங்கள் ஏராளமான சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பல தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் ஒரு பாரிய கூட்டணியை உருவாக்கினோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியின் ஒரு பகுதி மட்டுமே.

எவ்வாறாயினும், 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்றைய அரசாங்கத்தின் திட்டத்தை முற்றிலுமாக அழித்ததாக சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற ஒரு கட்சியை முற்றிலுமாக அழிக்க முடியாது எனவும், சுதந்திர கட்சியை வலுப்படுத்துவதற்காக ஒரு இளைய தலைமுறையை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும்” அவர் மேலும் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-